**********@@@@@@@@*******************************@@@@@@@@@********




காதலை ஏற்க மறுத்ததால் ஆசிட் வீச்சுக்கு உள்ளான இளம்பெண் வினோதினி காலமானார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஒருதலைக் காதலை நிராகரித்த வினோதினி என்ற 23 வயது இளம்பெண் மீது சுரேஷ் என்பவர் கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி ஆசிட் வீசப்பட்ட கொடூர சம்பவம் நடந்தது.
இதனால் தன்னுடைய இரண்டு கண் பார்வையையும் முற்றிலுமாக இழந்தார் வினோதினி. கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை வினோதினி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மரண தண்டனையே சரியானது:நாராயணசாமி
பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது, பெண்கள் மீது ஆசிட் வீசுவது போன்ற குற்றச்சம்பங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையே சரியானது என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
வினோதினி மரணம் குறித்து புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் : வினோதினி இறந்த செய்தி கேட்டு மிகவும் துக்கப்பட்டிருக்கிறேன். அந்தப் பெண்ணின் உடல் நலன் தேறுவதற்கும், கண் பார்வை திரும்ப வரவும், மத்திய அரசிடம் இருந்து நிதி ஆதாரம் பெற்றுத் தந்திருந்தேன். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
வினோதினி மரணச் செய்தி மிகவும் துக்கம் அளிக்கிறது.பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்ந்து நம் நாட்டில் நடந்து வருகிறது. டெல்லியில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம், அமிலம் வீச்சு சம்பவம் என தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
இவற்றைாத் தடுக்க கடுமையான சட்டத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களை தடுத்து நிறுத்த நீதிபதி வர்மா குழு அண்மையில் தனது பரிந்துரைகளை அளித்துள்ளது. அந்தக்குழுவின் பரிந்துரைகள் விரைவில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கைகைளை எடுத்து வருகிறது.
வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷ் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அந்த பெண்ணின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றார்.
சுரேஷ் மீது ஆசிட் ஊற்ற வேண்டும்: வினோதினி தந்தை தன் மகள் மீது ஆசிட் வீசி அவர் பலியாக காரணமாக இருந்த சுரேஷ் மீதும் ஆசிட் ஊற்றி தன் மகள் அடைந்த வேதனையை அடையச் செய்ய வேண்டும் என வினோதினியின் தந்தை ஜெயபாலன் கூறினார்.

வினோதினி மரணமடைந்த ஆதித்யா மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.



சமீபத்தில் நடந்த ஆசிட் வீச்சு சம்பவங்கள்:அண்மையில் நடந்த ஆசிட் வீச்சு சம்பவங்கள் பற்றிய விபரம்:
டிசம்பர் 2012, 30ம் தேதி அன்று உத்தரப்பிரதேசத்தில் முஸாஃபர்நகரில் இரண்டு பெண்கள் மீது திராவகம் வீசியதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.
சம்பவம் நடந்த நாளன்று இரவு 2 பெண்கள் ரிக்ஷாவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிக்ஷா அருகே வந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த திராவகத்தை அவர்கள் மீது வீசினார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில் ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள், பெண்கள் மீதான வன்முறை சம்பவம் அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டினர்.
காதலிக்க மறுத்ததால் ஆசீட் வீச்சு:கடந்த ஜனவரி30ம் தேதியன்று, சென்னை ஆதம்பாக்கம் திருவள்ளூவர் சாலையில் உள்ள இணையதள மையம் ஒன்றில் பணியாற்றி வந்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் நடந்தது. ஆசிட் வீசிய விஜயபாஸ்கர் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் என்னும் நபர் அங்குள்ள ஸ்ரீ இணையதள மையத்தில் பணியாற்றி வந்த பெண்ணை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால் அந்த இணையதள மையத்திற்கு வந்த விஜயபாஸ்கர் திடீரென அந்த பெண் மீது ஆசிட்டை வீசியுள்ளார். இதில், அவரது முகம், முதுகு மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தன.
ஆசிட் தாக்குதல்-உச்சநீதிமன்றம் அதிருப்தி :பெண்கள் மீது ஆசிட் வீசி நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆசிட் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கவும் மத்திய, மாநில அரசுகளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். பெண்கள் மீதான ஆசிட் தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும் என்று, தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி. ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு இதனை விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள், பெண்கள் மீதான ஆசிட் தாக்குதல்களைத் தடுக்க, அனைத்து மாநில தலைமை செயலாளர்களின் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்தக் கூட்டம் ஆறு வார காலத்திற்குள் நடத்தப்பட வேண்டும் என்றும், ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். தாக்குதலுக்கு ஆளாகும் பெண்களுக்கு அதிகபட்ச நிவாரணத் தொகை அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் விருப்பம் தெரிவித்தனர்.
                                                              -பசுமை நாயகன்