டெல்டா மாவட்டங்களில் மத்திய நிபுணர் குழு நேற்று நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் 4 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த 3 அதிகாரிகளும் இணைந்து தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயிகள், குறைந்தது 10 டி.எம்.சி தண்ணீராவது கிடைத்தால் மட்டுமே தற்போது பயிரிடப்பட்டுள்ள 3 லட்சம் ஏக்கர் நிலத்தை பாதுகாக்க முடியும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழக வேளாண் துறை ஆணையர் மற்றும் செயலாளர், வருவாய் துறை நிர்வாக ஆணையர் ஆகியோருடன் மத்திய குழுவினர் ஆலோசனை செய்து, நேற்று நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை தயார் செய்தனர்.
இந்த அறிக்கையில் விவசாயிகளின் தற்போதைய தேவை, சாகுபடிக்கு தேவையான நீரின் அளவு உள்ளிட்டவைகள் குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த அறிக்கையானது உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. சீலிட்ட உறையில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் இதனை வழங்கினர். உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ள விசாரணையின் போது, இந்த அறிக்கை விவரங்கள் பரிசீலிக்கப்பட உள்ளது.
- நாகை மகாகிருஷ்ணன்