ஆசிட் வீச்சால் கொடூரம்: புதிய தலைமுறை வாயிலாக நீதி கேட்டு இளம் பெண் குரல்


        டெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் பல வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
         அதேபோல் இந்த குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு எதிராக தேசத்தின் குரலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் காதலிக்க மறுத்த குற்றத்திற்காக ஆசிட் வீச்சுக்கு ஆளான காரைக்காலைச் சேர்ந்த வினோதினியின் முதல் குரலை பிரத்யேகமாக பதிவு செய்துள்ளது புதிய தலைமுறை.
ஆசிட் வீச்சில் பார்வை போன பரிதாபம்: புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் ஒருதலைக் காதலை நிராகரித்த வினோதினி என்ற 23 வயது இளம்பெண் மீது சுரேஷ் என்பவர் கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி ஆசிட் வீசப்பட்ட கொடூர சம்பவம் நடந்தது.
இதனால் தன்னுடைய இரண்டு கண் பார்வையை முற்றிலுமாக இழந்த வினோதினி, இப்போது தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராகவும், மருத்துவ செலவுகளுக்காகவும் போராடி வருகிறார்.
ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்யும் வினோதினியின் தந்தை மருத்துவச்செலவுகளுக்கு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுபோன்ற ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் பெண்களின் மறுவாழ்வுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆசிட் வீச்சில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டத்தில் தனிப்பிரிவுகள் இல்லை என்பதும் இவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
 -பசுமை நாயகன்