தானே புயல் தனது கோரத்தாண்டவத்தை பதிவு செய்து இன்றோடு ஒரு வருடம்
கடந்து விட்டது. தமிழகத்தில் அண்மைக் காலங்களில் இதுபோன்றதொரு மோசமான
பாதிப்பு ஏற்பட்டதில்லை என்று கூறும் அளவுக்கு தானே தாண்டவமாடியது. புயல்
ஏற்படுத்திய பாதிப்புகள், சோதனைகள் குறித்த தகவல்கள் பின்வருமாறு:-
ஆழிப்பேரலையை ஞாபகப்படுத்திய கடல் கொந்தளிப்பு.... கொட்டித்தீர்த்த பேய்
மழை... சுழன்றடித்த சூறாவளிக் காற்று...இதுதான் கடலூர், புதுச்சேரி மக்கள்
கடந்த ஆண்டு இதே நாளில் சந்தித்த இயற்கை சீற்றத்தின் சம்பவங்கள்.
மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி,
மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்கள் ஆகியவை சரிந்து விழுந்தன. புயலின்
வேகத்தைத் தாங்க முடியாமல், மரங்கள் முறிந்து விழுந்தன. கடற்கரையில்
நிறுத்தப்பட்டிருந்த படகுகள், சூறாவளிக் காற்றில், பிய்த்து எறியப்பட்டன.
கரையை நோக்கி சீறிப் பாய்ந்து வந்த ராட்சத அலைகள், ஏராளமான படகுகளை
வாரிச் சுருட்டிக் கொண்டு சென்றன. தொடர்ந்து மழை பெய்ததால், போக்குவரத்து
துண்டிக்கப்பட்டது. மீட்புப் பணிக்கு வந்த ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள்
கூட, ஆங்காங்கே சிக்கிக் கொண்டு நகர முடியாமல் சிக்கித் தவித்தன.
கரையை கடந்த கடலூரிலாகட்டும், ஆக்ரோஷ பாதங்களை பதித்த
புதுச்சேரியிலாகட்டும் தானே புயல் தனது தடத்தை கடுமையாகவே பதித்தது.
கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள தேவனாம்பட்டினம், சிங்காரத் தோப்பு,
சோனாங்குப்பம், புதுக்குப்பம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட 51 மீனவக்
கிராமங்கள் 'தானே' புயலில் சிக்கி சின்னாபின்னமாகின.
புயல் கரையை கடந்தபோது, இங்கு பெய்த கனமழை மற்றும் சூறாவளிக் காற்றினால்
ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 19 பேர்
பலியாகினர். காயமடைந்தவர்கள், போக்குவரத்து வசதி முடங்கியதால், சிகிச்சைப்
பெற முடியாமல் தவித்தனர்.
தானே பாதிப்பால், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான
மரங்கள் முறிந்து விழுந்தன. தொலைத்தொடர்பு சேவை முற்றிலும்
துண்டிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 40 ஆயிரம் மின்கம்பங்கள் முறிந்ததால்
மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
குடிநீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல், கடலூரும்,
புதுச்சேரியும் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்தன. தற்போது ஒரு வருடம் கடந்த
பின்னரும், தானே புயல் ஏற்படுத்திய சோகம் கடலூர், புதுச்சேரி மக்களின்
நினைவுகளில் நீங்காமல் இருக்கிறது.
-நாகை மகாகிருஷ்ணன்