போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி சமூக ஆர்வலர்கள் போராட்டம்

       போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நீதி வேண்டி, மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடத்தினர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 1984 ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் மெத்தில் ஐசோ சயனைட் என்ற விஷவாயுக் கசிவு காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டு ஊனமுற்றனர். அப்பகுதியில் தற்போது வரை நீர் விஷத்தன்மையுடன் காணப்படுவதாக சுற்றுச்சூழல் நிறுவனங்களின் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில், தொடர்புடைய டோவ் கெமிக்கல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போபாலில் மெழுகுவர்த்தி ஏந்தி ஏராளமானோர் ஊர்வலமாக சென்றனர். மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத அன்னிய நிறுவனங்களை அனுமதிக்கக்கூடாது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டவே இந்த போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இதில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
-நாகை மகாகிருஷ்ணன்